முனைவர் கோ. விசயராகவன்            இயக்குநர் ,  தமிழ் வளர்ச்சித் துறை. எழும்பூர்.

அணிந்துரை
   கெழுதகை நண்பரும் இலக்கிய ஆர்வலருமான கவிஞர் வயலை பாரதி வாசன் அவர்கள் சிறப்பான கருத்துக்களைச் சீரிய நடையில் சொல்லும் ஆற்றல் இயல்பாகவே வாய்த்த தமிழ் நெஞ்சினர் ஆவார்.
        தமிழ் உணர்வையும் தன்னம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டவர். இலக்கிய உலகில் தன் இடையறாத பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வயலை பாரதி வாசன் ,தமிழ் வயலை எழுதுகோல் ஏர்பிடித்து எப்போதும் உழுபவர்..

   குடிசை வீட்டில் வறுமை நிலையில் வாழ்ந்தாலும் உள்ளத்தில் குடி கொண்ட தமிழுக்கு வாழ்நாள் முழுக்க தொண்டாற்றி வாழவேண்டும் என்கிற நோக்கோடு செயல்படும் வயலை வாசனை   உள்ளபடியே என் உள்ளம் மகிழ்ந்து பாராட்டுகிறேன்.

 பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்ந்த நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்ற பொழுதெல்லாம் அங்குச் சென்று, தன்னுடைய தமிழ்ப் பங்களிப்பை ஆற்றி வருகிற தமிழ் உள்ளமாய் வயலை வாசனை நன்கறிவேன்..

   ஆற்றலாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை.. ஆற்றல் கொண்டிருப்பவர்கள் ஆற்று நீரைப் போல வேகமாக இயங்க வேண்டும்.. விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும்.. அப்போது தான் வெற்றி கிட்டும்.. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு வயலை வாசனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 தன்னுடைய கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற களமாகப் பல்வேறு தொகுப்புக் கவிதை நூல்களில் தன் கவிதைகளை மிகுந்த ஈடுபாட்டோடு வழங்கி வருவதைப் பாராட்டுகிறேன்..
   செய்ந்நன்றி மறவாத நற்குணம் குறைந்து வருகிற இந்தக் கலியுகக் காலத்தில், தன் கவிப் பயிருக்கு நீர் வார்த்த பெருமக்களை எல்லாம் தன் ஒவ்வொரு நூலிலும் தான் பேசுகின்ற மேடைகளிலும் நினைவு கூர்வதைக் கவிஞர் வயலை வாசனின் தனிச்சிறப்பாக நான் கருதுகிறேன்..    தமிழ் உலகில் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து வருகிற ஒவ்வொரு எழுத்தாளனும் படைப்பாளனும் மறவாது கடைபிடிக்க வேண்டிய அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பங்களிப்பும் பண்புகளும் வயலை வாசனிடத்தில் நிரம்ப இருக்கின்றன..

    நல்ல பண்புகளின் நிறைகுடமாக.. நற்றமிழ் ஆர்வலராக.. ஆற்றல் மிகுந்த கவிஞராக  இலக்கியக் கூட்டங்களில் தலைவனாக மட்டுமல்லாது தொண்டனாகவும் நின்று தோளோடு தோள் கொடுத்து உதவும் தொண்டுள்ளம் படைத்த வயலை வாசனின் ஆளுமையை இந்நூல் எங்கும் நிறைந்திருக்கக் காணலாம்..
     நவீன மயமாகிவிட்ட ஆயிரம் இசைக்கருவிகள் நகரத்தில் இசைத்துக் கொண்டிருந்தாலும், கிராமத்துக் குயில் ஒன்று கூவும் இசையில், இனம் தெரியாத ஓர் இன்பம் இதயத்தை முற்றுகை இடுவது போல், வயலை வாசனின் படைப்புகளில் மண் மணம் கமழ்ந்து மனங்களை வசப்படுத்துகிறது.

   முழு உலகுக்கும் பொதுவறம் சொன்ன பொய்யில் புலவன் வள்ளுவப் பெருந்தகையின் நெறியிலும் எட்டயபுரத்தில் பிறந்து எட்டுத் திசையிலும் தமிழ்ச்சுடர்  பரப்பிய பைந்தமிழ்த் தேர்ப்பாகன் மகாகவி பாரதியையும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களையும் தன் நெஞ்சில் தேக்கி, அவர்களது கோட்பாடுகளின் வழியில், தன்மானத்தோடு தமிழ் மானம் காக்க புறப்பட்ட இனமான சிங்கமாக.. ஒவ்வொரு தமிழ்ச் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்ட அங்கமாகத் திகழ்கிற வயலை பாரதிவாசன் நீடு வாழவும் அவர் இயற்றிய நூல் நிலைத்த புகழ் பெறவும் மனதார வாழ்த்துகிறேன்..

வாழ்நாள் முழுதும் வயலையாரின் தமிழ்ப்பணி தடையின்றித் தொடரட்டும்…செல்லும் திசையெல்லாம் வெல்லும் தமிழ் ஒலிக்கட்டும்!

315 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *