இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புதுடெல்லி:


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். அவர் வருகிற 23-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருவார் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவரது அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் 24-ந்தேதி தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
பின்னர் அகமதாபாத்தில் நடத்தப்படும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்ற போது ஹுஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுபோன்று அகமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.
டிரம்பின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு, தாஜ்மகாலுக்கு செல்வது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. டிரம்புடன் அவரது மனைவி-மகள் ஆகியோர் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
டிரம்ப்-மோடி சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் உள்பட இந்திய உள் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படாது என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் இந்தியா வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.