குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்சென்னை:

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் குரூப்-2ஏ மோசடி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது.

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதற்கு சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரே மூளையாக செயல்பட்டு உள்ளார்.

அவருடன் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் சித்தாண்டியும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

குரூப்-2ஏ மோசடியில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அரசு துறைகளில் பணியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த முறைகேட்டில் பெண்கள் பலரும் துணிச்சலுடன் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

குரூப்-2ஏ மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

இவர் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் சித்தாண்டியின் தம்பிஆவார். முறைகேடான வழியில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று 8-வது இடத்தில் இவர் தேர்வாகி இருந்தார்.

இவரைப்போல ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி என்பவரும் முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சுதா, விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாதேவி ஆகியோர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரித்த வலையில் சிக்கினர்.

இவர்கள் 3 பேரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தேர்வாகி இருக்கிறார்கள்.

விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். குரூப்-2ஏ தேர்வில் (2017-ம் ஆண்டு) 279 மதிப்பெண்கள் பெற்று 15-வது இடத்தை இவர் பிடித்துள்ளார்.

இதன் பிறகு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

இதன்பிறகு இடைத்தரகராகவும் இவர் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் இவர் தரகர் ஜெயக்குமாரிடம் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் தனக்கு தெரிந்த 5 பேரிடம் ரூ.38 லட்சம் பணத்தை லஞ்சமாக வசூலித்துள்ளார். பின்னர் தனது கணவர் சம்பத், சகோதரர் கார்த்திக் ஆகியோர் மூலமாக தரகர் ஜெயக்குமாரிடம் இந்த பணத்தை கொடுத்துள்ளார்.

சுதாதேவியை போன்று குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்ற பலரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு பணம் வசூலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மோசடி பணத்தை நேரடியாகவே தரகர் ஜெயக்குமார் பெற்றுள்ளார்.

குரூப்-2ஏ தேர்வில் மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ள திரு.வி.க. நகர் விக்னேஷ் ரூ.9 லட்சம் பணம் கொடுத்து 46-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்துறையில் உதவியாளராக இவர் பணியாற்றி வந்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

இதேபோல தூத்துக்குடியை சேர்ந்த சுதா ரூ.8 லட்சம் பணம் கொடுத்து 252 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குரூப்-2ஏ தேர்வில் 11-வது இடத்தை பிடித்த இவர் சொந்த ஊரிலேயே பணிநியமன ஆணையை பெற்றுள்ளார்.

தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களைப் போன்று மோசடியில் ஈடுபட்டு அரசு பணிகளில் சேர்ந்துள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

144 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *