

கர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்சன்னபட்னா:
கர்நாடக மாநிலம் சன்னபட்னா பகுதியை சேர்ந்தவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள். இருவரும் சந்தையில் பூ விற்று வருகிறார்கள்.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்து ராகியம்மாளின் வங்கி கணக்கில் பெரும் தொகை கைமாறியதாக கூறி இருவரையும் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது தான் அவர்களுடைய வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது தெரிய வந்தது. மனைவி ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகவும், அந்த சேலைக்கு கார் ஒன்று பரிசாக விழுந்துள்ளதாக கூறி சிலர் தங்களுடைய வங்கி கணக்குகளை கேட்டு பெற்றதாக மாலிக் கூறினார்.
வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்களுடைய வங்கி கணக்கை மர்மநபர்கள் சிலர் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.