டெல்லியில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- பிரதமர் மோடிபுதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

முதலில் டிரம்ப்பும், மோடியும் தனியாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு ராஜ்ஜிய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. டிரம்ப்-மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும்.

நாட்டின் பாதுகாப்புக்காக மிக அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அந்த அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்று கூறப்படுகிறது.

எம்.எச்.60 ரோமியோ வகையை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சிறப்புகள் கொண்டது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படைக்கு மேலும் வலிமை கொடுக்க முடியும்.

பாதுகாப்புத்துறையில் செய்யப்பட்ட இந்த புதிய ஒப்பந்தங்கள் இந்திய ராணுவ துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

125 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *