28 செப்டம்பர் 2020 – தற்போதைய பொதுமுடக்க அமலாக்கத்தின் மூன்றுமாத காலஅளவில் தீவிர மாரடைப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலஅளவோடு ஒப்பிடுகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. உலக இருதய தினம் விரைவில் அனுசரிக்கப்படுவதையொட்டி இது தொடர்பாக பேசிய மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இருதயவியல் சிகிச்சை நிபுணர்கள் இத்தகவலை தெரிவித்திருக்கின்றனர். கோவிட் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதில் ஏற்படுகின்ற தாமதத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர மாரடைப்பு நோயாளிகள் மத்தியில் இறப்புவிகிதமும் அதிகரித்திருப்பது அறியப்பட்டுள்ளது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். கணேசன் இது தொடர்பாக பேசுகையில், கோவிட்-19 பரவல் நிகழும் இக்காலகட்டத்தில் சிகிச்சைக்காக வரும் தீவிர மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதை நாங்கள் காண்கிறோம். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்த கோவிட்-19 மற்றும் பொதுமுடக்கம் அமலிலுள்ள 3 மாத காலஅளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணைிக்கை 355. 2019 ஆம் ஆண்டில் இதே காலஅளவின்போது மாரடைப்புக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 820. எங்களது இந்த புள்ளிவிவரத் தகவலானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட இருதய வியல் சார்ந்த கணக்கெடுப்புகளோடு ஒத்துப்போகிறது. இந்த இரு பிராந்தியங்களிலும் அவர்களது நாடுகளில் தீவிர மாரடைப்பு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் 50-60% குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்: “முன்பே இருதய நோய் இருப்பது கண்டறியப்படாத நபர்களுக்கு கூட கோவிட் தொற்றின் காரணமாக, இதற்கு முன்பு வெளிப்படாமல் இருந்த இருதய பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படக்கூடும். இருதய நாள அடைப்புகள், தொற்று, காய்ச்சல் மற்றும் உறுப்பு வீக்கமுள்ள நபர்களிடம் இதன் காரணமாக இருதய நாளங்கள் பாதிப்படைந்து சீர்குலையக்கூடும். இதற்கும் கூடுதலாக, தொற்று ஏற்பட்ட நபர்களின் ஒரு துணைப்பிரிவு இருக்கிறது. இவர்களில் சிலர் இதற்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்திருந்தாலும் கூட ரைவஸ் நேரடியாக இருதயத்தில் தொற்றை ஏற்படுத்துவதனால், வீக்கமும், அழற்சியும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வகையான அழற்சியும், வீக்கமும் இருதய துடிப்பு தொந்தரவுகளுக்கும் மற்றும் இருதய தசை சேதத்திற்கும் வழிவகுக்கக்கூடும்,” என்று கூறினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ். செல்வமணி பேசுகையில், “தீவிர மாரடைப்பு நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வீட்டிலேயே தங்கியிருப்பதால் குறைவான மனஅழுத்தம், குறைந்திருக்கும் காற்றுமாசு, தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தினால் மருத்துவ சிகிச்சைக்கு வர தயங்கும் நபர்கள், மருத்துவமனைக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதியின்மை ஆகியவை இக்காரணங்களுள் சிலவாகும். எனினும், இந்த கோவிட்-19 – பொதுமுடக்க காலத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதற்குப் பிறகு உரிய சிகிச்சையைப்பெற நோயாளிகள் தாமதிப்பதன் காரணமாக மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து காணப்பட்டிருக்கிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆர். சிவகுமார் மேலும் பேசுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றானது பல வழிகளில் இருதய பிரச்சனைகளை தூண்டக்கூடும். பரவக்கூடிய நுரையீரல் நோயாக இருக்கும் இது, ஆரோக்கியமான நபர்கள் மற்றும் ஏற்கனவே இருதய நோய் பாதிப்புள்ள நபர்கள் ஆகிய இருதரப்பினரிடமும் இருதயத்தில் பாதிப்பையும், அழுத்தத்தையும் விளைவிக்கிறது. இரண்டாவதாக, வழக்கமான மாரடைப்புகளை விளைவிக்கின்ற அடைப்புகள் அவர்களது சிரைகளில் இல்லையென்றாலும் கூட மாரடைப்பு போன்று வெளிப்படுகின்ற இருதய சேதத்தை இந்நபர்கள் பெறக்கூடும். ஆக்சிஜன் இல்லாமல் இருதய தசை தவிக்கின்றபோது இது நிகழக்கூடும்; ஆக்சிஜனின் தேவைக்கும் ஆக்சிஜன் கிடைக்கப்பெறும் நிலைக்குமிடையே உள்ள பொருத்தமின்மையின் காரணமாக கோவிட்-19 தொற்றுள்ள நபர்களிடம் இது ஏற்படக்கூடும்,” என்று கூறினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். எம். சம்பத்குமார் பேசும்போது, “கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுள் பெரும்பான்மையோர் நலமுடன் மீண்டெழுவதாக தோன்றுகையில், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு உடல் முழுவதும் கடுமையான அழற்சியும், வீக்கமும் ஏற்படுகிறது. இது ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ என அழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாள அமைப்பை பாதிக்கின்ற இந்த அழற்சியானது, பெரும்பாலான தீவிர பாதிப்பு நேர்வுகளிலும், நோயின் முதிச்சியடைந்த நிலையிலும் காணப்படுகிறது. பரவலான இரத்த உறைவு உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது இருதயத்திற்கு சேதம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும். மருந்துகளோடு தொடர்புடைய இருதய சேதம் என்பது, கோவிட்-19 சிகிச்சையின்போது ஏற்படுவதும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, நச்சுயிரிக்கு எதிரான மருந்துகளின் பயன்பாடு கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்,” என்று விளக்கமளித்தார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை – இருதயவியல் துறையின் மருத்துவ ஆலோசகர் & மின் இயற்பியலாளர் டாக்டர். P. ஜெயபாண்டியன் கூறியதாவது: தொடக்கத்தில் கோவிட்-19 – தொற்றின் பொதுவான அம்சங்களாக நுரையீரல்களில் நோய் பாதிப்பு, இரத்தநாள அமைப்பில் அழற்சி மற்றும் இருதயத்திற்கு சேதம் ஆகியவை என கருதப்பட்டது. இது, 20-30% வரை நோயாளிகளிடம் காணப்பட்டது மேலும் 40% உயிரிழப்பிற்கும் காரணமாக இருந்தது. ஏற்கனவே இருதயம் பாதிப்புள்ள நோயாளிகளிடம், ஒட்டுமொத்தமாக கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நபர்களை விட 5 மடங்கு அதிக உயிரிழப்பு விகிதம் இருக்கிறது. கோவிட்-19-க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு நபர்கள் (23%), கடுமையான இருதய நாள சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்த கோவிட்-19 நோயாளிகளுள் 8 முதல் 12 % வரையிலான நோயாளிகளுக்கு தீவிர இருதய பாதிப்பு இருப்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.”
“சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை கழுவி தூய்மையாக்குவது, பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை நிறுத்தாமல் உட்கொள்வது, உயர்இரத்த அழுத்தம் அல்லது இருதய செலிழப்பு பாதிப்புள்ள நபர்கள் தவறாது உரிய காலத்தில் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது, டெலிமெடிசன் வசதியை பயன்படுத்திக் கொள்வது என்பது கோவிட் பரவல் நிகழும் இக்காலகட்டத்தில் இருதய நோயாளிகளுக்கான எமது ஆலோசனையாகும். மாரடைப்பிற்கான அறிகுறிகள் இருக்குமானால், கோவிட்-19 குறித்த அச்சத்தை விடுத்து உடனடியாக சிகிச்சையை பெறுவதை இருப்பதை அவர்கள் நிச்சயம் உறுதி செய்யவேண்டும். மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கும் இடர் வாய்ப்பானது, மருத்துவமனையில் கோவிட் தொற்று ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பை விட பலமடங்கு அதிகமானது, என்று டாக்டர். P. ஜெயபாண்டியன் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு உலக இருதய தினத்தின் கருப்பொருள், “இருதய நாள நோய்களை (CVD) தோற்கடிக்க உங்கள் இருதயத்தை பயன்படுத்துங்கள்” என்பதாகும். உலகளவில் மொத்த உயிரிழப்புகளில் 31 சதவிகித பங்களிப்போடு கொண்டு மனிதர்களிடம் இறப்பிற்கான முதன்மை காரணமாக இருதயநாள நோய்கள் உருவெடுத்திருக்கின்றன. பெரும்பாலான உயிரிழப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் (பக்கவாதம்) காரணமாக ஏற்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் உலகளவில் தொற்று அல்லாத நோய்களின் காரணமாக, உரிய காலத்திற்கு முன்பே நிகழ்ந்த 17 மில்லியன் இறப்புகளுள் 82 % குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்ந்திருக்கிறது. இதில் 37% உயிரிழப்புகளுக்கு இரத்தநாள நோய்களே காரணமாக இருந்திருக்கின்றன. எனினும், நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பருமன், மதுபானத்தை தீங்கு விளைவிக்கும் முறையில் பயன்படுத்துவது போன்ற இடர் காரணிகளை கவனத்தில் கொண்டு அவற்றை தவிர்ப்பதன் வழியாகவும் மக்கள்தொகை முழுவதிற்குமான செயல்உத்திகளை பயன்படுத்துவதன் வழியாகவும் பெரும்பாலான இருதய நாள நோய்கள் வராமல் தடுக்கமுடியும்.