கொரோனா பேரிடர் காலங்களில் அனைத்து சமூக நல அமைப்புகளை ஒருங்கிணைத்து முன்களப் பணியாளராக சிறப்பாக பணியாற்றிய செங்குன்றம் எம் 4 காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த பீட்டர் ஜவஹர் பாப்பு அவர்கள் பணி மாறுதலாகி காசிமேடுக்கு செல்கிறார்கள்.
கொரோனா பேரிடர் காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வருவாய்த் துறையுடன் இணைந்து தங்குமிடம், உணவு ஆகிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பியதற்காகவும், கொரோனா காலத்தில் அனைத்து வியாபார சங்கங்களையும், சமூக நல அமைப்புகளையும் அரவணைத்து கொரோனா தொற்று செங்குன்றத்தில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தமைக்காகவும் பாராட்டு விழா செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வை செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட வியாபார சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.கோபி, சென்னை – செங்குன்றம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் இரா.ஏ.பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். சமூக செயற்பாட்டாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர்  அனைவரையும் வரவேற்றார். 
ஊராட்சி மன்றத் தலைவர்கள் விளாங்காடுபாக்கம் ச.பாரதி சரவணன், பாடியநல்லூர் ஜெயலட்சுமி நடராஜன், தீர்த்தம்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், புள்ளிலைன் தமிழ்ச்செல்வி ரமேஷ், அழிஞ்சிவாக்கம் ஆஷா கல்விநாதன், அனைத்து வியாபார சங்கம், சமூக நல அமைப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜி.ராஜேந்திரன் துவக்கவுரையாற்ற, டாக்டர் ஆர்.முனுசாமி. ஆர்.செல்வக்குமார், சமீர் மற்றும் வியாபார சங்க. சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள், வழக்கிறஞர்கள், பத்திரிகையாளர்கள் வாழ்த்தி பேசினர்.
புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் உரையாற்றுகையில், எங்களுக்கும் காவல்துறைக்கும் மிகப் பெரிய கௌரவத்தை தந்திருக்கின்றீர்கள். 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து ஜவஹரை போன்ற அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தாலும். எனது சகோதரன் என்னை விட்டு பிரிந்து செல்லும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. செங்குன்றம் மக்களுக்கு காவல் துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருக்கின்றேன் என்றார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க சம்மேளனத் தலைவர் டி.துளசிங்கம் வாழ்த்துரை வழங்கினார். 
காவல் ஆய்வாளர் பீட்டர் ஜவஹர் பாப்பு ஏற்புரையாற்றுகையில், எனக்கு இந்த பாராட்டு விழா நடத்துவதற்கு முழு முக்கிய காரணமே என்னை சுற்றி கொரோன பேரிடர் காலங்களில் பணிபுரிந்த பேரூராட்சி, ஊராட்சி மன்ற நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், வருவாய்த் துறை, சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபார பெருமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவருமே வழங்கிய ஒத்துழைப்பினால் மட்டுமேதான். ஜாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோருமே இணைந்து பணியாற்றினார்கள். எனது வாழ்நாளில் செங்குன்றத்தை நான் மறக்க மாட்டேன். எனக்கு இப்படியொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து, என்னை நெகிழ்ச்சி அடைய வைத்து விட்டீர்கள். நான் செல்லப் போகும் காவல் நிலைய பகுதியில் அதிக பணி செய்வதற்கான உந்துதலை தந்திருக்கின்றீர்கள். விழா ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி” என்றார். 
டி.பவானிசங்கர் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

232 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *