● மார்பக புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதை
தாமதிப்பது, நோய் பாதிப்பின்மீது கடுமையான தாக்கத்தையும்
மற்றும் உயிரிழப்பு வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது
● நம் நாட்டில் நிலை I அல்லது II –ல் மார்பக புற்றுநோய்
கண்டறிந்து உறுதிசெய்யப்படுவது 35% நோயாளிகளிடம்
மட்டுமே; நோய் வளர்ச்சியடைந்து முற்றிய நிலையிலேயே
எஞ்சிய விழுக்காட்டினர் சிகிச்சையை நாடுகின்றனர்.


மதுரை / 20 அக்டோபர், 2020 – கோவிட் தொற்று ஏற்படுமோ என்ற
அச்சத்தின் காரணமாக மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும்
சந்தித்து ஆலோசனை பெறுவதை தவிர்த்ததால் அல்லது
தள்ளிப்போட்டதால் கடந்த 5 மாதங்களில் சிகிச்சையை நாடும் மார்பக
புற்றுநோய் பாதிப்புள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக, 70
சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக மீனாட்சி மிஷன்
மருத்துவமனையிலுள்ள புற்றுநோய் சிகிச்சை துறையைச் சேர்ந்த சிறப்பு
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொது போக்குவரத்து இல்லாத
காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல இயலாததும் ஒரு காரணமாக
இருக்கக்கூடும். சிகிச்சை பெறுவதை தாமதிப்பது அல்லது
தள்ளிப்போடுவது கடுமையான உடல்நல பாதிப்புகளை விளைவிக்கும்
என்பது அனைவராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் புற்றுநோய்க்கான கதிரியக்க
சிகிச்சையியலின் தலைவர், டாக்டர் KS. கிருஷ்ண குமார் பேசுகையில்,
“சிகிச்சை பெறுவதை தாமதிப்பது, நோயுற்ற விகிதத்தின் மீதும் மற்றும்
உயிரிழப்பிற்கான வாய்ப்பு மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிலை II அல்லது நிலை III -ல் உள்ள புற்றுநோயானது, மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் என்ற குறைந்த காலஅளவில் தாமதிக்கப்பட்டால் கூட
IV நிலை புற்றுநோயாக மாறிவிடும். வசதியான பின்னணியைச் சேர்ந்த
நோயாளிகள் அவர்களது தனிப்பட்ட வாகனங்களில் சிகிச்சைக்காக வருகை
தந்த நிலையில், வசதியற்ற சமூக, பொருளாதார பின்புலத்தைச் சேர்ந்த
நோயாளிகள் எவருமே சிகிச்சையைப்பெற மருத்துவமனைகளுக்கு
வரவில்லை. தங்களது வீடுகளிலிருந்து, மருத்துவமனைகளுக்கு
செல்வதற்கு பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதி
கோவிட்-19 தொற்றுப்பரவல் காலகட்டத்தில் கிடைக்கப்பெறாததே இதற்கு
காரணம். கோவிட் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக,
நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு சேர்ந்து வருவதற்கும், அவர்களை
கவனித்துக்கொள்கின்ற உதவியாளர்களுக்கும் விருப்பம் இருக்கவில்லை,”
என்று விளக்கமளித்தார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல்
துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்தினம் இது
குறித்து கூறியதாவது: “கொரோனா வைரஸ் தொற்று, மார்பக புற்றுநோய்
பாதிப்புள்ள நோயாளிகளின் சிகிச்சை விளைவு மீது நேரடி தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, கீமோதெரபி சிகிச்சையை
மேற்கொள்பவர்களுக்கு குறைவான நோய்எதிர்ப்பு திறனே இருப்பதால்
இத்தொற்று ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாக
இருக்கிறது. யதார்த்தத்தில் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும்
நோயாளிகளுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதற்கு 20 சதவிகித வாய்ப்பு
இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நோயாளிகள் மருத்துவமனையில்
தங்கியிருக்கின்ற நேர அளவை குறைக்கவும் வீட்டிற்கு விரைவாக திரும்ப
செல்லவும் ஏதுவாக்கும் வகையில், ஊசி மற்றும் மருந்துகளுக்குப் பதிலாக
கீமோதெரபியை மாத்திரைகள் மூலம் வழங்க நாங்கள் முயற்சித்து
வருகிறோம்.”

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ அறுவைசிகிச்சை
புற்றுநோயியல் துறையின் முதுநிலை மருத்துவர்
டாக்டர். R. விஜயபாஸ்கர் கூறியதாவது, “மார்பக புற்றுநோய் பற்றிய
விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாக இருப்பதால் மிக தாமதமாகவே
நோயறிதல் செய்யப்படுகிறது. நாட்டிலுள்ள மொத்த மார்பக
புற்றுநோயாளிகளில் சுமார் 35 சதவிகித நபர்களுக்கு மட்டுமே நிலைகள் I
அல்லது II –ன் போது நோயறிதல் செய்யப்படுகிறது. 50 சதவிகித
நோயாளிகள், III ம் நிலையிலும், 15 சதவிகிதத்தினர் நிலை நான்கிலும்
தங்களது புற்றுநோய் பாதிப்பை கண்டறிகின்றனர். இதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் மார்பக புற்றுநோய் ஏற்படும் நோயாளிகளில் 95
சதவிகிதத்தினர் நிலை I அல்லது II – ன் போதே சிகிச்சைக்காக
மருத்துவர்களை அணுகுகின்றனர். புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில்
நோயாளியை காப்பாற்றுவதற்காக மார்பகத்தை அகற்ற வேண்டிய
அவசியம் இருப்பதில்லை. இப்புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில்
நோயாளிகளுக்கு எந்த வலி உணர்வும் இருக்காது என்பதே இதிலுள்ள
பிரச்சனை; இதனால் அவர்கள் சிகிச்சையை நாடுவதில்லை. வலி
ஏற்படத்தொடங்கும் நேரத்தில் புற்றுநோயானது, ஏற்கனவே முற்றிய
நிலையை எட்டியிருக்கும்,”

டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்தினம் மேலும் பேசுகையில், “நகர்ப்புற
பகுதிகளில் வயது முதிர்ந்த பெண்களையே பாதிப்பதாக நீண்ட காலமாக
கருதப்பட்டு வந்த மார்பக புற்றுநோய், வெறும் 10 ஆண்டுகளில் 250
சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் இந்நோய்
இப்போது நகர்ப்புறம் – கிராமப்புறம் என்ற பிரிவுகளையும் தாண்டி
பரவியிருப்பதோடு, இளவயது பெண்கள் மத்தியிலும் காணப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 இலட்சம் மார்பக
புற்றுநோய் நேர்வுகள் புதிதாக கண்டறியப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு
முன்பு வரை இது 54,000 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நகரங்களில் மிகப்பொதுவான புற்றுநோயாகவும், கிராமப்புற பகுதிகளில்
இரண்டாவதாக அதிகமாக காணப்படும் புற்றுநோயாகவும் இது
உருவெடுத்திருக்கிறது. நிஜத்தில் இந்திய பெண்களில் காணப்படும்
அனைத்து புற்றுநோய் நேர்வுகளிலும் நான்கில் ஒரு பங்கிற்கும்
அதிகமாகவும், புற்றுநோயுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் ஐந்தாவது
மிக முக்கியமான காரணமாகவும் மார்பக புற்றுநோய் இருக்கிறது,” என்று
கூறினார்.

டாக்டர். R. விஜயபாஸ்கர் மேலும் விளக்கமளிக்கையில், “மார்பக
புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை
அளிக்கப்படுமானால், அது குணப்படுத்தக்கூடியதே. 40 வயதை
எட்டியதற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்கு ஒருமுறை
மேமோகிராம் என அழைக்கப்படுகின்ற பரிசோதனையை செய்துகொள்ள
வேண்டும். மார்பகத்தை முற்றிலுமாக அகற்றுவது முதலில்
மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு மார்பக புற்றுநோய்க்கான
அறுவைசிகிச்சை மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. மார்பக
புற்றுநோய்க்கு மிக பொதுவான அறுவைசிகிச்சையாக மாடிஃபைட்
ரேடிக்கல் மேஸ்டெக்டாமி (MRM) என்பது இருக்கிறது. இதில் மார்பகத்தை மறுசீரமைப்பது அல்லது மறுசீரமைக்காமல் முழுமையாக அகற்றுவது
ஆகியவை இடம்பெறுகிறது. இதற்கான மற்றொரு விருப்பத்தேர்வு என்பது,
மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சையளிப்பது என்பதாகும். இதில்,
புற்றுக்கட்டியை மட்டும் அகற்றிவிட்டு மார்பகத்தின் எஞ்சிய பகுதி
அப்படியே விடப்படும்,” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: “மேற்கத்திய நாடுகளில் ஆரம்பநிலை மார்பக
புற்றுநோய்க்கு மார்பகத்தை அகற்றாமல் தக்கவைத்துக்கொள்ளும்
சிகிச்சையே (BCS) இப்போது நிலையான சிகிச்சை முறையாக
ஆகியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்தியாவில், மருத்துவர்களுடனோ
அல்லது நோயாளிகளுடனோ இது இன்னும் பிரபலமாகவில்லை.
இந்நாட்டில் 11-23 சதவிகித அறுவைசிகிச்சை நிபுணர்களே இந்த
அறுவைசிகிச்சை முறையை விரும்பி தேர்வு செய்கின்றனர்.
ஒப்பீட்டளவில் மேற்கத்திய நாடுகளில் இது 60-70 சதவிகிதமாக
இருக்கிறது. MRM – ஐ விட BCS – ல் உள்ள சாதகமான விஷயங்களாக
இருப்பவை, சிறப்பான உடல் தோற்றம், பாலியல் செயல்பாடு மற்றும்
உளவியல் ரீதியில் பாதிப்புகளின்றி இருத்தல் என்பவைகளாகும். BCS
சிகிச்சை முறை குறித்து நோயாளிகளுக்கு தெரிவிப்பதும், மார்பகத்தை
அகற்றியாக வேண்டும் என்பதிலிருந்து விடுபட்டு, முழுமையான
வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களை அனுமதிப்பதும் மருத்துவ
சமூகத்தின் பொறுப்பாக இருக்கிறது,”

டாக்டர் KS கிருஷ்ணகுமார் இதுகுறித்து பேசுகையில், “மார்பகத்தை
அகற்றியப் பிறகு, மார்பக புற்றுநோயாளிகளின் வாழ்க்கை தரத்தை
மதிப்பீடு செய்வதற்காக ஒரு கருத்தாய்வை மீனாட்சி மிஷன்
மருத்துவமனையில் நாங்கள் நடத்தினோம். அதிர்ச்சி தரும் சில
உண்மைகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. ஏறக்குறைய மூன்றில்
ஒருபங்கு நோயாளிகள், தாங்கள் தங்களது வாழ்க்கைத் துணைவரால்
உதாசீனம் செய்யப்படுவதாக தெரிவித்தனர். இந்த பெண்களுள் பலர்
அவர்களது கணவர்களால் கைவிடப்படுகின்றனர். தொடக்கத்தில்,
மார்பகத்தை அகற்றும் முடிவிற்கு அவர்கள் ஆதரவளித்திருந்தாலும் கூட
மனைவியின் மார்பகத்தை அகற்றுவது என்ற உண்மையை அவர்களால்
மனதார ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பது இதற்கான காரணமாக
இருக்கக்கூடும். உடலுறவு குறித்த அவர்களது மனப்பான்மையில்
எதிர்மறை தாக்கம் ஏற்பட்டிருப்பதாக சுமார் 38 சதவிகித நோயாளிகள்
குறிப்பிட்டனர். மார்பகத்தை அகற்றியது தங்களது உடல்தோற்றத்தை
எதிர்மறையாக பாதித்திருப்பதாக 73 சதவிகித நோயாளிகள் கூறினர்.

நோயானது, ஆரம்ப நிலைகளிலும் குணப்படுத்தக்கூடியதாக இருக்கின்ற
போதிலும் கூட பெரும்பாலான மார்பக புற்றுநோயாளிகளும், அவர்களது
வாழ்க்கைத் துணைவர்களும் மற்றும் உறவினர்களும் முழுமையாக
மார்பகத்தை அகற்றுவதற்கு ஆதரவாக முடிவெடுக்கின்றனர்; முழுமையாக
மார்பகம் அகற்றப்படுமானால், புற்றுநோயானது, மீண்டும் திரும்ப
வளராது என்ற தவறான கண்ணோட்டமும் அச்சமுமே இதற்கு காரணம்.
எமது ஆய்வில் நாங்கள் கண்டறிந்ததைப்போல புற்றுநோய் பாதிப்புள்ள
பெண்களின் வாழ்க்கைத்தரம் பிற்பாடு மோசமாவதைத் தவிர்க்க,
மார்பகத்தை முழுமையாக அகற்றாமல், தக்கவைக்கும் சிகிச்சையை
தேர்வு செய்வது குறித்து இந்த நோயாளிகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி
கற்பிப்பது அவசியமாகும்,” என்று கூறினார்.

188 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *