சென்னை: நிவர் புயல் காரணமாக தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலைகளில் இதனால் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது. நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து இந்த புயல் 350 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த புயல் தமிழகத்தை நெருங்க நெருங்க மழை அதிகமாக பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் மாலை சென்னையில் மழை தொடங்கியது. அப்போதில் இருந்து இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மட்டும் சில மணி நேரம் சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.

மழை

தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது.

இந்த பகுதிகளில் தற்போதும் கனமழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளில் எல்லாம் மழை புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.

வெள்ளம்

சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. முட்டி வரை சில ஏரியாக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது. வேளச்சேரி மொத்தமும் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.

முன்னெச்சரிக்கை

தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் கூட அதீத மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்களும் விழுந்துள்ளது. சாலையில் 20 க்கும் அதிகமான மரங்கள் பல இடங்களில் விழுந்துள்ளது.

ஏரிகள்

சென்னையில் உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகளில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி சில முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் இன்று மதியம் திறக்கப்படும்.

156 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *