கண்ணீரில் விவசாயிகள் தவிப்பு : கடலூர் மாவட்டம் முழுவதும் கன மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் முழ்கி கடலூர் மாவட்டம் முழுவதும் கடலாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மன்னார் வளைகுடா கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டுள்ளது. தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கினாலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முழுவதும் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கன மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பெருமாள் ஏரியில் இருந்து உபரி நீர் 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் 4 ஆயிரம் கன அடியும், விஎன்எஸ் மதகு மூலம் 1500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும், என்எல்சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் குறிஞ்சிப்பாடி, கல்குணம், ஓணான்குப்பம், கொளக்குடி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கன மழை, பரவனாற்றில் வெள்ளம், பெருமாள் ஏரி, வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு ஆகியவற்றின் காரணமாக நூற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் தண்ணீரில் முழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்த பெய்து வருவதால் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. கோவில் தெப்பக்குளம் நிரம்பி வழிகிறது. கோவிலுக்குள் 5 அடி உயரத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.

பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். பாம்பன் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் கடலூர் மாவட்ட மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

130 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *