சென்னை: நிவர் புயலின் புண்ணியத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் 9 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதால் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஏரியை பார்வையிட வரும் பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர் மட்ட உயரம் 22.01 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,123 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 103 கன அடியும், சென்னை குடிநீருக்காக 100 கன அடி நீரும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து இதுவரை சுமார் 400 மில்லியன் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. மேலும் கோடையை சமாளிக்க பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் 9 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளது.

இதனால் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும், தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பின்வரும் காலங்களில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிக்கராயபுரம் கல்குவாரிக்கு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்தவுடன் சுமார் 25 முதல் 50 கனஅடி நீரை கல்குவாரிக்கு கொண்டு சென்று தேக்கிவைக்க முடியும் என தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடிக்கு மேல் சென்றதால், கடந்த 25-ந் தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. கடந்த 6 தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், மதகின் ஷட்டரில் செடி, கொடிகள் அதிக அளவில் சிக்கியதால் ராட்சத மிதவை எந்திரங்கள் மூலம் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஏரியில் இருந்து நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் ஏராளமானோர் மதகின் அருகே தேங்கி உள்ள நீரில் மீன்களை பிடித்து செல்கின்றனர். பொதுமக்கள் ஏரியை பார்க்க அனுமதிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஏரிக்கு வந்து மதகில் இருந்து வரும் சிறிய அளவிலான நீரில் குளித்து விட்டு மீன்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

137 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *