சென்னை: வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தபடி, வங்க கடலில் இன்னொரு புயல் வந்துள்ளது.. இது புரேவி புயலாக நேற்று முன்தினம் சாயங்காலம் வலுப்பெற்று, நேற்று இலங்கையை கடந்தது.. இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.. இது மணிக்கு 12 கிமீ வேகத்தில் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

இதையொட்டி, நேற்று இரவு முதலே மழை கொட்ட தொடங்கிவிட்டது.. சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை இன்று பெய்யக்கூடும்.. ,இந்த 6 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

விமான சேவை

நாளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைக்கால்

இதில், காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.. காரைக்காலில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் செயல்படும் நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்ட நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.

சூறைக்காற்று

அதேபோல, ராமேஸ்வரம் தீவில் நேற்று பகல் முதல் இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவு பகுதியில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள். பாம்பனில் வரலாறு காணாத சூறைக்காற்று வீசி வருகிறது.. பாம்பன் தெற்குவாடி கடற்கரை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துவிட்டதால், அங்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் மழை

புரேவி புயல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது… சென்னையில் போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

நீலகிரி

நீலகிரியில் இரவு முதல் மழை கொட்டி வருகிறது.. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால், அதை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் இறங்கி வருகின்றனர். அதேபோல காற்றும் பலமாக வீசி வருகிறது… வழக்கமாக இந்த மாதங்களில் அதிகமாக மழைப்பொழிவும், குளிரும் நிலவுவது இயல்பு என்றாலும், நிவர், மற்றும் புரேவியின் தாக்கத்தினால் நீலகிரியில் விடாமல் மழை பெய்து வருகிறது… இதனால் இயல்பு வாழ்க்கை இங்கேயும் முடங்கி உள்ளது!

38 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *