சென்னை: எம்ஜிஆரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சொந்தம் கொண்டாடுவதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைவர்கள் இது சந்தர்ப வாதத்தின் உச்சம் என்று கண்டித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கமல்ஹாசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கினார். அப்போது பேசிய கமல், மதுரையை இன்னொரு தலைநகராக அறிவிப்போம். எம்ஜிஆர் கனவின் நீட்சிதான் இது. எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்தான். எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன் என்றார். இதைக்கேட்டு ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். ஏற்கனவே ரஜினியும், பாஜக மாநில தலைவர் எல் முருகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் எம்ஜிஆரை கொண்டாடி கருத்து சொல்லியிருந்தனர். இந்த சூழலில் கமலும் இப்படி ஒரு கருத்தை சொன்னதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் ஆதரவு

அண்மையில் அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். அதில் விதிவிலக்காக இருந்தது எம்.ஜி.ஆர். மட்டுமே. ஆகவே மக்களை பற்றி சிந்திக்காத தற்போதுள்ள நடிகர்களுக்கு கூட்டம் கூடலாம். அவை வாக்குகளாக மாறாது என்றார். அத்துடன் மிக கடுமையாக பேசினார்.

எம்ஜிஆரின் மடியில் நான்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த போது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்” என்றார்.

கானல் நீராகும்

எம்ஜிஆரை கமல் தீவிரமாக சொந்தம் கொண்டாடி வருவதால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கமலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்த சூழலில் அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுபற்றி நேற்று பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் செய்தியாளர்களிடம் கூறும் போது, கமல், ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து. கமல் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்ஜிஆர் பற்றி பேசாதது ஏன், எம்ஜிஆர் வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராகத்தான் போவார்கள்.

சந்தர்ப்பவாதம்

இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். எம்ஜிஆரை பிற கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்பவாதத்தின் உச்சம். மூன்றாவது நான்காவது அணி கூட ஆரம்பிக்கலாம். ஆனால் முதல் அணியாக அதிமுக தான் இருக்கும் என்றார்.

மேடைகளில் நான் பேசுவேன்

முன்னதாக கமல்ஹாசனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் அண்மையில் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ”நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த இடம் கிடைத்தாலும் அதை நான் பயன்படுத்துவோன் . கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. எந்த மேடை கிடைத்தாலும் அங்கு நான் பேசுவேன். அது பேச்சுரிமை சம்பந்தமானது” என்றார்.

107 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *