தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மதிய நிலவரப்படி வேட்பாளர்களின் முன்னிலை நிலவரத்தை பார்ப்போம்.

வாக்குகள் எண்ணும் பணிசென்னை:

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 91,975 பதவி இடங்கள் உள்ளன. இதில் 18,850 இடங்களுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 73,405 பதவிகளை நிரப்ப ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இந்த இடங்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 27-ந்தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் 30-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராம உள்ளாட்சி தலைவர், கிராம உள்ளாட்சி உறுப்பினர், ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 விதமான பதவிகளுக்கு மக்கள் வாக்களித்தனர். வாக்களிப்பதற்கு வசதியாக இந்த 4 பதவிகளுக்கும் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் 315 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. 315 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.

முன்னதாக இன்று காலை 7 மணிக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு சீல்கள் பிரிக்கப்பட்டன. பிறகு அவை வாக்குகள் எண்ணும் அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓட்டுப் பெட்டிகளில் இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதலில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் ஓட்டுச்சீட்டுகள் கொட்டப்பட்டன. ஒவ்வொரு மேஜையிலும் கொட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுகளை தலா 3 பேர் தனித்தனியாக பிரித்தனர்.

அதாவது ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட உறுப்பினர் ஆகியோருக்கான 4 வண்ணங்களில் உள்ள ஓட்டுச் சீட்டுகளை அவர்கள் தனித்தனியாக பிரித்து எடுத்தனர். இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

4 வண்ணங்களில் இருந்த ஓட்டுச்சீட்டுகளை தனித்தனியாக பிரித்து முடித்ததும் அவற்றை தலா 50 ஓட்டுச் சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டினார்கள். பின்னர் அந்த ஓட்டுக்கட்டுகள் 4 தனித்தனி அறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு 8 சுற்றுகளாக ஓட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பணிகளை தொடங்குவதற்கு பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் அதிகாரிகளுக்கும், முகவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் ஓட்டு எண்ணிக்கை தாமதமானது. இதனால் 4 வண்ண வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி முடிவதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆனது.

ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை தேர்வு செய்வதற்கு கிராமங்களில் சில ஆயிரம் வாக்குகளே பதிவாகி இருந்தது. இதனால் இந்த 2 பதவிகளுக்கும் வாக்குகள் எண்ணி முடிக்கும் பணி முதலில் நிறைவுபெற்றது. காலை 10 மணி முதல் கிராம உள்ளாட்சி தலைவர், உறுப்பினர்கள் வெற்றி விபரம் வெளியாகத் தொடங்கியது.

சில கிராம பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வண்ண வாக்குச் சீட்டுகளை பிரிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதனால் 11 மணி அளவில் மாவட்ட வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களில் முன்னிலை பெற்றவர்கள் விவரம் வெளியாகத் தொடங்கியது.

மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 515 மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 113 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. இதில் 66 இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்பட்ட காட்சி

அ.தி.மு.க. 47 இடங்களில் முன்னிலை பெற்று 2-வது இடத்தில் இருந்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மிக கடுமையான தோல்வியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அமைப்புகளைப் பொருத்தவரை தமிழகத்தில் மொத்தம் 5067 ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 139 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது.

ஒன்றியங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றனர். 80 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க. 53 இடங்களில்தான் முன்னிலை பெற்றிருந்தது. அ.ம.மு.க. 3, மற்ற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன.

2 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி முந்தியது. திமுக வேட்பாளர்கள் 80 இடங்களில் முன்னிலையில் இருந்தனர். அதிமுக வேட்பாளர்கள் 78 இடங்களில் முன்னிலை பெற்றனர்.

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களைப் பொருத்தவரை, அதிமுக கூட்டணி 180 இடங்களிலும், திமுக கூட்டணி 182 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.

உள்ளாட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் இன்னும் ஏராளமான இடங்களின் முன்னிலை தெரிய வேண்டியதுள்ளது. எனவே அ.தி.மு.க., தி.மு.க. இடையே முன்னிலை நிலவரம் மாறவும் வாய்ப்புள்ளது.

இன்று நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணும் பணி நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்குப் பிறகே பெரும்பாலான இடங்களில் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவும், இணைய தளத்தில் பதிவு செய்யவும், மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை காலை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிந்துவிடும்.

182 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *