

பஞ்சாப் வீரர் ஜோர்டான் இரண்டு ரன்கள் ஓடியபோது, பேட்டை கிரிசுக்குள் சரியாக வைக்கவில்லை என்று அம்பயர் ஒரு ரன்னைக் குறைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.
ஐ.பி.எல் 13-வது சீசனின் 2-வது போட்டி துபாயில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே தடுமாற்றமாகவே அமைந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களில் அவுட்டானார். அவரை அடுத்து வந்த கருண் நாயார், நிக்கோலஸ் பூராண், கிளன் மெக்ஸ்வேல் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி வெளியேறினர். பஞ்சாப் அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பஞ்சாப் அணியின் மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் பொறுப்புடனும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி விக்கெட்டை பறிகொடுத்ததால் போட்டி சூப்பர் ஒவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
முன்னதாக, 19-வது ஓவரில் பஞ்சாப் வீரர் ஜோர்டான், லாங்ஆன் திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் எடுத்தார். அப்போது, அவர் பேட்டை சரியாக கிரிசுக்குள் வைத்திருந்தார். ஆனால், அம்பயர் நிதின் மேனன் அவர் சரியாக பேட்டை வைக்கவில்லை என்று கூறி ஒரு ரன்னைக் குறைத்துவிட்டார். ஒருவேளை அவர் ரன்னைக் குறைக்கவில்லை என்றால் சூப்பர் ஓவர் செல்லாமலே 20 ஓவர்குள்ளேயே பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். அம்பயரின் தவறு ஒரு அணியின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பலரும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.